தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மேம்பாலம் இருளில் மூழ்கியது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மூழ்கிவிடும். அப்போது போக்குவரத்து தடைபடும்போது தாமரைப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த  மக்கள் கடும் அவதிப்பட்டதுடன் சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றித்தான் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிக்கு செல்லவேண்டும்.

இந்த பிரச்னையை தீர்க்க கடந்த 19 வருடங்களுக்கு முன்பு தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே  மேம்பாலம் கட்டப்பட்டது. இதன்பிறகு இந்த பாலத்தின் வழியாக பெரியபாளையத்தில் இருந்து ஆவடி, திருநின்றவூர்,  திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகிறது.

இதுதவிர ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் இருந்தும் ஆந்திர மாநிலத்திற்கு கனரக வாகனங்களும் வந்து  செல்கிறது. மிக முக்கியம் வாய்ந்த இந்த  பாலத்தின் இருபுறங்களிலும் தற்போது மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுகிறது. பைக்கில் செல்கின்றவர்களை மறித்து வழிப்பறி போன்றவையும் நடைபெறுகிறது. இதனால் இந்த பகுதியில் வரும்போது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே விபத்துக்களை தவிர்க்கவும் வழிப்பறிகளை தடுக்கவும் பாலத்தின் இருபுறங்களிலும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

‘’ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் இருந்து தற்போது கனரக வாகனங்கள் அதிக அளவில் ஆந்திர பகுதிகளுக்கு செல்கிறது. தாமரைப்பாக்கம் அருகில் உள்ள புன்னப்பாக்கம், பாகல்மேடு, வெங்கல் போன்ற 10க்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை பறித்துக்கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்ல இந்த பாலத்தின் வழியாக தான் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு  இரவு நேரத்தில் பைக்கை ஓட்டிக்கொண்டு செல்கின்றனர்.

அப்போது வழிப்பறி நடைபெறுகிறது. இதனால் வியாபாரிகளும் விவசாயிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். இருள் சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே தாமரைப்பாக்கம் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் புதிதாக  மின்விளக்குகள் அமைக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.