நாமக்கல் நாட்டு வெடி விபத்து: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் – முதல்வர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமார் என்கின்ற தில்லை குமார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் ஐந்து வயதில் பெண்குழந்தையும் உள்ளது. தில்லைகுமார் மோகனூரிலும் ஓலப்பாளையத்திலும் அரசின் உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நாளை புத்தாண்டு என்பதால் அதிகப்படியான பட்டாசுகள் விற்பனையாகும் என நினைத்த தில்லை குமார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான பட்டாசுகளை வாங்கி தனது வீட்டில் குவித்து வைத்துள்ளார். இந்த சூழலில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இருந்த பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த வெடி விபத்தில் வீட்டில் இருந்த தில்லை குமார், அவரது மனைவி பிரியா, அவரது தாயார் செல்வி மற்றும் அண்டை வீட்டை சேர்ந்த பெரியக்காள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தில்லை குமாரின் வீடு தரை மட்டமானது. மேலும் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

இன்று அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கும் உரிய
இழப்பீடு
வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையியல் கூறியுள்ளதாவது; நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார் (வயது 35), பிரியா (வயது 28), செல்வி (வயது 55) மற்றும் பெரியக்காள் (வயது 73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவ்விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.