இன்று அதிகாலை 3 மணி அளவில் நாமக்கல் மாவட்டத்தை அடுத்த மோகனூர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு வெடித்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் “நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டு தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தில்லை குமார், பிரியா, செல்வி மற்றும் பெரியக்காள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்திகளை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல ரூ. 2 லட்சம் காயமுற்றவர்களுக்கு தலா ரூ.50,000 முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.