தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பனிக்காலம் ஆரம்பமாகி உள்ளது.
இதனால், சென்னையில் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி, விபத்துகளும் ஏற்படுகின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலையில் கடுமையான பனிமூட்டம் இருந்தது. இதனால், பதினான்கு விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை சரியாக தெரியவில்லை என்று மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் சென்னை வந்த, மும்பை விமானம் பனிமூட்டம் காரணமாக வானத்தில் வட்டமிட்டு கொண்டிருந்தது. அதன் பின்னர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
அதேபோன்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விமானங்கள் மற்றும் பெங்களூரூ, கொல்கத்தா, கோவை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த விமானங்களும் வானத்தில் வட்டமிட்டு அரை மணி நேரத்திற்கு பின்னர் தாமதமாக தரையிறங்கின.
அத்துடன், சென்னையில் இருந்து மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், கொல்கத்தா உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு செல்லவிருந்த விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. பனிமூட்டத்தின் காரணமாக விமானம் தாமதம் என்பது விமான நிலையங்களுக்கு வந்த பிறகு தான் பயணிகளுக்கே தெரியவந்தது.