பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் புத்தாண்டு (ஜனவரி 1) தினத்தையொட்டி எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை, சர்ச் சாலை உள்ளிட்ட இடங்களில் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.
இதனால் வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல் போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெங்களூரு போலீஸார் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். நள்ளிரவு 1 மணி வரை மதுபான விடுதி, கடைகள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை ஆகிய முக்கிய இடங்களில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் மேம்பாலங்கள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மேல் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் நள்ளிரவு கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க 500 சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பெங்களூரு மாநகரம் முழுவதும் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் குவியும் முக்கிய இடங்களை கண்காணிக்க 800 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 20 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.