பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், தகுதி வாய்ந்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை.

அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின.

இதற்கிடையே, 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பு கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட உள்ள செங்கரும்புகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் லலிதா உடனிருந்தார். முன்னதாக சீர்காழி தாலுகா பகுதிகளில் நவீன மயமாக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் சீர்காழி நகர கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.