மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூபாய் 15.28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து வரும் விமானத்தில் மதுரைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து ஒரு வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் களிமண் போன்ற பொருளில் 278 கிராம் எடை கொண்ட தங்கம் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சுக்குர்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த ரூபாய் 15 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள 278 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கடத்தல் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.