மலிவு விலையில் ஜெனரிக் மருந்துகள் – மத்திய அரசு நடவடிக்கை!

நாடு முழுவதும் 766 மாவட்டங்களில் 743ஐ உள்ளடக்கிய 9,000க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிரதமர் மலிவு விலை மருந்துகள் திட்டம் நவம்பர், 2008ஆம் ஆண்டில், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துத் துறையால் தொடங்கப்பட்டது. 3,000 மருந்தகங்களைத் திறக்க வேண்டும் என்ற இலக்கு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டப்பட்டது.

மேலும், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 6,000 விற்பனை நிலையங்கள் என்ற மாற்றி அமைக்கப்பட்ட இலக்கும் எட்டப்பட்டது. கடந்த நிதியாண்டில் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 8,610 ஆக இருந்தது. இப்போது 9,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையை 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்க்குள் 10,000 ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தற்போது 1,759 மருந்துகள் மற்றும் 280 அறுவை சிகிச்சை சாதனங்கள் உள்ளன. இத்திட்டத்தின் மூலம் நிலையான மற்றும் சீரான வருமானத்துடன் கூடிய சுயதொழில் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் மருந்துகளின் விலை பிராண்டட் மருந்துகளை விட 50 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை குறைவாகும்.

2021-22 நிதியாண்டில் ரூ.893.56 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கு பிராண்டட் மருந்துகளை வாங்கிய வகையில் ஒப்பிடும் போது சுமார் ரூ. 5,300 கோடி ரூபாய் அளவிற்கு சேமிப்பிற்கு வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஊக்கத் தொகையாக ரூ.5 லட்சம் நிதியுதவியாகவும், ஒருமுறை கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.2 லட்சமும் (வருமான வரி மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்களுக்கான திருப்பிச் செலுத்த வேண்டியது) நிதி அயோக் அமைப்பால் குறிப்பிடப்பட வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களில் மருந்தகங்கள் திறக்கப்படுவதற்கும், பெண் தொழில்முனைவோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் திறப்பதற்கும் உதவிகரமாக இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் உள்ள இந்த 9,000 விற்பனை நிலையங்கள் மூலம் சானிட்டரி நாப்கின்கள் பேட் ஒன்று ரூ.1க்கு விற்கப்படுகிறது. 30.11.2022 வரை, 31.40 கோடி சானிட்டரி பேடுகள், நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குருகிராம், சென்னை, கவுகாத்தி மற்றும் சூரத்தில் நான்கு பொருட்கள் சேமிப்பு கிடங்குகள் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.