TNEB Aadhar link : தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன. 31ஆம் தேதிவரை கால அவகாசம் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலம் முழுவதும் நடமாடும் மையங்கள் செயல்பட உள்ளன. இதற்காக கூடுதலாக 2 ஆயிரத்து 811 நடமாடும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் நாளை மறுநாள் (ஜன. 2) முதல் ஜனவரி 31ஆம் தேதிவரை செயல்பட இருக்கிறது.
தற்போதுவரை, மின் இணைப்புடன் ஆதாரை 1.6 கோடி பேர் இணைத்துள்ளனர். கன்னியாகுமரியில்தான் அதிகமானோர் ஆதாரை, மின் இணைப்புடன் இணைத்துள்ளனர்” என்றார். மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படாது என பரவும் தகவல் பொய்யானது என்றும் அதனை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
முன்னதாக, டிச. 31ஆம் தேதிவரை (இன்று) மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முதலமைச்சர் ஸ்டாலினுடனான ஆலோசனைக்கு பிறகு இதன் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முகாம்கள் பண்டிகை நாள்களை தவிர ஞாயிறுக்கிழமை உள்ளிட்ட அனைத்து நாள்களிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம்கள் மட்டுமின்றி, ஆன்லைன் மூலமாகவும் ஆதார் எண் இணைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.