லண்டன் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா

லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 137 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு டிச.28-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இத்திட்டம் 2027-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், பூர்வீக இனங்களின் தோட்டம், ஆர்போரேடம்ஸ், பேம்புசிடம்ஸ், மரக்கன்றுகள் மற்றும் ஹீலிங் கார்டன், மூலிகைத் தோட்டம், ரோஜா தோட்டம், ராக்கரி, ஜப்பானிய தோட்டம், பண்டைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு போன்ற கூறுகளும் இடம்பெற்றிருக்கும்.

மேலும், வழிகாட்டப்பட்ட நடைபயிற்சி, குழந்தைகள் மற்றும் தாவர உயிரியல் பன்முகத்தன்மை பற்றி மாணவர்களுக்குத் தெரிவிக்கும் கல்வித் திட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கான பயிற்சி பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள், படகு சவாரி, இயற்கை பாதைகள், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் பிற ஆரோக்கிய நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகளையும் கொண்டிருக்கும்.

இத்தாவரவியல் பூங்கா லண்டன் கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தனியாக கையெழுத்திடப்படும்.

மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடு, திட்டப் பகுதியைச் சுற்றி வேலி அமைத்தல், போன்றவற்றுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அரசு சார்பில் ரூ.1 கோடி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.