வேட்டி, சேலை திட்டம்: “பதில் வந்ததே தவிர, பலன் கிடைக்கவில்லை" – ஆர்.பி.உதயகுமார் காட்டம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், “கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எம்ஜிஆர்-ஆல் 1983-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்குகிற திட்டம் தொடங்கப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார்

அதைத்தொடர்ந்து அம்மா ஆட்சியில் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டது.   எடப்பாடியார் ஆட்சியில் 2021- ஆம் ஆண்டு ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

தற்போது வேட்டி சேலைகள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதை எடப்பாடியார் அறிக்கை மூலம் அரசுக்கு கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். வரும் பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலை நெசவு செய்யும் பணியில் திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளால் முடங்கிப் போயுள்ளது. இதனால் நெசவாளர்களுக்கும் கூட்டுறவு சொசைட்டிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இலவச வேட்டி- சேலை!

90 சதவிகித நெசவாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தரமில்லாத நூல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால்தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருப்பதை எடப்பாடியார் ஆணித்தரமாக அரசின் கவனத்திற்கு எடுத்து வைத்தார். 

இதன் காரணமாக தைப்பொங்கலுக்கு ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படுமா என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நெசவாளர் குடும்பங்கள் வேலை இழந்து தவிப்பதை கண்டித்து அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று  எடப்பாடியார் கூறிய குற்றச்சாட்டுக்கு கைத்தறி துறை அமைச்சரின் பதிலில் உண்மை இல்லை. 

கடந்த ஆண்டும் இதுகுறித்து சட்டமன்றத்தில் கேட்கப்பட்டபோது பதில் வந்ததே தவிர மக்களுக்கு  பலன் கிடைக்கவில்லை. பதில் சொல்வதில் நீங்கள் வல்லவராக இருக்கலாம், ஆனால், மக்களுக்கு திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு தோல்வி அடைந்திருக்கிறது.

ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடியார் மக்களுக்காக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை  நடத்திக் கொண்டிருக்கிறார். உரிமைக்குரல் எழுப்பி கரும்பை மக்களுக்கு பெற்று கொடுத்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை தொடர்ந்து அரசுக்கு முன்வைத்து வருகிறார். வேட்டி, சேலை திட்டம் குறித்து எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கூறியிருக்கிற பதில் கழுவுற மீனில் நழுவுகிற மீனாக உள்ளதே தவிர, உள்ளபடி உண்மையை எடுத்துச் சொல்கிற அறிக்கையாக அமையவில்லை. பதில் தந்து  நேரத்தை செலவழிக்காமல் பலன்களை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.