காந்திநகர்: குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம், விஸ்நகரில் பிறந்த ஹீராபென் அவரது குடும்பத்தில் மூத்த பெண். அவரது 16-வது வயதிலேயே வட்நகரை சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடியுடன் திருமணம் நடைபெற்றது. புகுந்த வீட்டிலும் அவர்தான் மூத்த மருமகள்.
இளம்வயது என்ற போதிலும்குடும்பத்தினரை அரவணைத்து செல்லும் பக்குவம் ஹீராபென்னுக்கு இருந்தது. காலை 4 மணிக்கே கணவர் தாமோதர்தாஸ் கடைக்கு சென்றுவிடுவார். அவருக்காக அதிகாலையிலேயே ஹீராபென் எழுந்துவிடுவார். தாய், தந்தையை பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்றளவும் அதிகாலையில் எழும் பழக்கத்தை பின்பற்றுகிறார்.
கடுமையான உழைப்பாளி: ஏழ்மையான குடும்ப சூழலில் ஓர் அறை கொண்ட வீட்டில் வசித்த ஹீராபென் கடுமையான உழைப்பாளி. பழைய வீடு என்பதால் மழைக்காலத்தில் வீடு ஒழுகும். குழந்தைகளை ஒழுகாத இடத்தில் தூங்க வைத்துவிட்டு மழை தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து அந்த தண்ணீரை அன்றாட தேவைக்குப் பயன்படுத்துவார். வீட்டில் கழிப்பறை, குளியல் அறை கிடையாது. அடிப்படை வசதிகள் இல்லாதபோதும் பிள்ளைகளுக்கு எந்த குறையும் இல்லாமல் ஹீராபென் வளர்த்தார். அருகில் உள்ள குளத்துக்கு சென்று அனைத்து குழந்தைகளின் துணிகளையும் துவைத்து வீட்டுக்கு கொண்டு வருவார். குழந்தைகளை குளத்தில் குளிப்பாட்டிவிடுவார். எந்த சூழ்நிலையிலும் அவர் மனம் தளரமாட்டார். பொறுமை, நிதானத்துடன் தனது அன்றாட பணிகளில் மட்டுமே ஹீராபென் கவனம் செலுத்துவார். இந்த குணத்தை பிரதமர் நரேந்திர மோடி அப்படியே பிரதிபலிக்கிறார்.
இதேபோல சுத்தம், தூய்மையில் ஹீராபென் அதிக கவனம் செலுத்துவார். கணவரின் படுக்கை,பிள்ளைகளின் படுக்கைகளில் விரிக்கப்படும் போர்வை தூய்மையாக இருக்கும். வீட்டில் சிறு தூசிகூட இருக்காது. தாயிடம் கற்ற சுத்தம், தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி இப்போதும் கண்டிப்புடன் பின்பற்றுகிறார்.
ஏழ்மை என்ற போதிலும் ஹீராபென் யாரிடமும் உதவிகேட்டது கிடையாது. காலையிலேயே தனது வீட்டில் பணிகளைமுடித்துவிட்டு மதிய வேளையில் சில வீடுகளில் சமையல் வேலைசெய்து பணம் சம்பாதித்தார். இந்தப் பணத்தை பிள்ளைகளின்படிப்புக்காகவும் குடும்பத்துக் காகவும் செலவிட்டார்.