சென்னை: பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை தொகுப்பு கையேட்டை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், புத்தொழில் ஆதார மானிய நிதியை வழங்கியதுடன், தொழில் முனைவோர்களுக்கான ‘வழிகாட்டி மென்பொருள்’ இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைத் தொகுப்புக்கான அரசாணையில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
புத்தொழில் நிறுவனங்களுக்கு, டான்சீட் மானிய நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தலா ரூ.5 லட்சம் வீதம் 3 தவணைகளில் இது வழங்கப்படும். ஒரு நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களில் 25 சதவீதம் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனங்கள், 10 சதவீதம் ஊரக வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும்.
மாநில அரசு உதவியுடன் இயங்கும் தொழில்வளர் காப்பகங்களில், பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உறுப்பினர் கட்டணம் மற்றும் ஓராண்டுக்கான வாடகைக் கட்டணம் ரூ.2 லட்சம் வரை கிடையாது. மேலும், பெண்கள் நலன் சார்ந்த தயாரிப்புகள், சேவைகளை வழங்கும் பெம்டெக் நிறுவனங்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு தொழில் விரிவாக்க பயிற்சி, தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர் தளம் வழியாக முதலீடு திரட்ட உதவிகள் என சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிலைத்த நீடித்த வளர்ச்சி, சுழற்சி பொருளாதாரம் சார்ந்து, வணிக ரீதியில் பயனளிக்கும் விதமான திட்டங்களுக்கு ‘பசுமை காலநிலை நிதி’ திட்டத்தின்கீழ் நிதி வழங்கப்படும்.பசுமை தொழில்நுட்ப தயாரிப்புகள், சேவைகளை அரசு கொள்முதல் செய்ய ஏதுவாக ‘அரசு கொள்முதல் உதவி மையமானது’ தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சென்னை மற்றும் மதுரை அலுவலகங்களில் அமைக்கப்படும்.
ஆண்டுக்கு 20 பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஓராண்டு கால தொழில் விரைவாக்க பயிற்சி அளிக்கப்படும்.
தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவுஅளிக்க, தகுதியான நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானிய நிதியாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இதுவரை நடைபெற்ற 3 கட்டங்களின்கீழ் 60 நிறுவனங்கள் தற்போது, 4 -வது கட்டமாக 25 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் என ரூ.1.25 கோடி மானிய நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், புதுயுக தொழில் முனைவுபயணத்தில் தகுந்த வழிகாட்டுதலை எதிர்பார்க்கும் தொழில் முனைவோர்களையும், வழிகாட்ட தயாராக இருக்கும் அறிவுரைஞர்களையும் இணைக்கும் ‘Mentor TN’ என்ற வழிகாட்டி மென்பொருள் இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறைசெயலர் வி.அருண்ராய் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.