நாமக்கல் மாவட்டத்தை அடுத்த மோகனூர் மேட்டு தெருவில் வசித்து வருபவர் தில்லை குமார். இவர் தில்லை பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் தில்லைகுமாரின் வீடு முழுவதும் தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் வீட்டின் அருகே வசித்து வந்த மூதாட்டி பெரியக்காள் என்பவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ், வட்டாட்சியர் ஜானகி, மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் இருந்து பட்டாசு கடை உரிமையாளர் தில்லை குமார், அவரது மனைவி பிரியா, தாய் செல்வி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதனால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.