குண்டூர்: மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்வில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் உள்ள விகாஸ் நகரில் நடைபெற்றுள்ளது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லூரில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருந்தனர்.
ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தொடர் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அதன்போது சங்கராந்தி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதோடு இந்த சம்பவத்தில் காயம்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நெரிசலில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலும், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும் உயிரிழந்துள்ளனர். இதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.