இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது? லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்!

உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என்ற பேச்சு தான் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக தினந்தோறும் ஒரு தலைப்பு செய்தியாவது வந்து விடுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும்
கொரோனா வைரஸ்
பாதிப்புகளை பார்க்க முடிகிறது. நான்காவது அலை உருவாகுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமாகிறது.

கொரோனா களநிலவரம்

அதாவது, நாடு முழுவதும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மொத்த பாதிப்புகள் 2,670ஆக குறைந்திருக்கிறது. கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 92,955 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆக்டிவ் நோயாளிகள்

கடந்த மூன்று ஆண்டுகளில் 4.46 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த பாதிப்பில் 1.19 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டால் தற்போதைய ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 0.01 சதவீதம் மட்டுமே. தேசிய அளவில் குணமடையும் விகிதம் 98.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முதலிடத்தில் கேரளா

அதாவது, 4.41 கோடி பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநில வாரியாக பார்க்கையில் அதிகபட்சமாக கேரளாவில் 1,444 ஆக்டிவ் நோயாளிகள் இருக்கின்றனர். இதற்கடுத்த இடங்களில் கர்நாடகா (326), மகாராஷ்டிரா (161), ஒடிசா (88), தமிழ்நாடு (86), ராஜஸ்தான் (79), தெலங்கானா (62) ஆகிய மாநிலங்கள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவது கடந்த மூன்று ஆண்டுகளாக ஊக்குவிக்கப்பட்டு வந்தது.

தடுப்பூசி டோஸ் விவரம்

கோவாக்சின்
, கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளை இரண்டு டோஸ்கள் போட்டுக் கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் போடலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 220.10 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆபத்தான நாடுகள்

முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம், ஏர் சுவிதா தளத்தில் தங்களது பரிசோதனை விவரங்களை விரிவாக பதிவு செய்வது, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம். ஏனெனில் இந்த நாடுகளில் தான் அதிகமாக வைரஸ் தொற்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.