“என் மரணத்துக்கு பாஜக எம்.எல்.ஏ உட்பட ஐவர்தான் காரணம்!" – கடிதம் எழுதிவிட்டு தொழிலதிபர் தற்கொலை

கர்நாடக மாநிலம், பெங்களூர் கனகபுரா சாலை ககலிபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று மாலை, ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. காரிலிருந்து திடீரென துப்பாக்கியில் சுட்ட சத்தம் கேட்டது. அங்குள்ள மக்கள் வந்து பார்த்தபோது, காரினுள் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோனைக்காக அனுப்பிவிட்டு, இறந்தவர் கையில் இருந்த, எட்டு பக்கம் கொண்ட மரணக்கடிதத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.

மரணம்

பகீர்… தற்கொலைக்கடிதம்!

விசாரணையில் தற்கொலை செய்துகொண்டது, பெங்களூர் எச்.எஸ்.ஆர் லே-அவுட்டைச் சேர்ந்த பிரதீப் (47) என்பதும், அவர் லைசென்ஸ் பெற்ற கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

இந்த நிலையில், அவர் கையில் வைத்திருந்த தற்கொலைக்குறிப்பில், ‘‘கோபி, சோமையா ஆகிய இருவரின் வற்புறுத்தலுக்குப் பிறகு, 2018-ம் ஆண்டில் பெங்களூருவிலுள்ள ஒரு கிளப்பில் நான் ரூ.1.5 கோடி முதலீடு செய்தேன். முதலீடு செய்த தொகைக்கான ‘ரிட்டன்’ மற்றும் கிளப்பில் பணிபுரியும் சம்பளம் என, ஒவ்வொரு மாதமும் ரூ.3 லட்சத்தை சம்பளமாக தருவதாக இருவரும் உறுதியளித்தனர். நான் மே 2018 முதல் டிசம்பர் வரை முதலீடு செய்தேன். ஆனால், அவர்களிடமிருந்து எனக்கு ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை. எனது செலவுகளைச் சமாளிக்கவும் கடனைத் திருப்பிச் செலுத்தவும் எனது வீட்டையும், மைசூரில் உள்ள ஓர் இடத்தையும் விற்பனை செய்துவிட்டேன்.

பிரதீப் எழுதிய தற்கொலைக்கடிதம்.

எனக்கான பணத்தை திரும்ப வழங்குமாறு, கோபி மற்றும் சோமையாவிடம் பேசுமாறு அரவிந்த் லிம்பாவலியிடம் (பா.ஜ.க எம்.எல்.ஏ) கோரிக்கை விடுத்தேன். ஆனால், அரவிந்த் லிம்பாவலி, கோபி, சோமையாவை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டார்’’ என எழுதியதுடன், ‘‘பா.ஜ.க எம்.எல்.ஏ அரவிந்த லிம்பாவலி, கோபி, சோமையா, ஜி ரமேஷ் ரெட்டி, ஜெயராம் ரெட்டி, ராகவா பட் என ஐந்து பேர்தான் என்னுடைய தற்கொலைக்குக் காரணம், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என் மரணத்துக்கு நீதி வேண்டும்’’ என பாஜக எம்.எல்.ஏ உட்பட ஐந்து பேரின் பெயர்களுடன், மொபைல் எண்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

‘எனக்குத் தெரியவில்லை‘!

இந்தச் சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், பா.ஜ.க வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, இன்று பா.ஜ.க எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி நிருபர்களிடம், ‘‘பிரதீப் மரணக்குறிப்பில் என் பெயரையும் குறிப்பிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. 2010 முதல் அவர் (பிரதீப்) 2010 – 2013 வரையில், எனது சமூக ஊடக கணக்குகளை கையாண்டு வந்தார். அவர் தனது வணிகத் தகராறை எனது கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார். நான் அவரையும் அவரின் கூட்டாளிகளையும் சமரசமாகத் தீர்க்கும்படி கேட்டுக் கொண்டேன்.

பா.ஜ.க எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி.

அவர் எவ்வளவு முதலீடு செய்தார் என்றுகூட நான் கேட்கவில்லை, பங்குதாரர்களுக்கு அவர்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது பற்றி எந்த ஆலோசனையும் செய்யவில்லை. இதன் பின்னர், அவர் (பிரதீப்) என்னிடம் வந்து எனக்கு நன்றியும் கூறினார். அவர், ஏன் தற்கொலை செய்துகொண்டார், என் பெயரை ஏன் குறிப்பிட்டார் என எனக்குத் தெரியவில்லை” என விளக்கமளித்திருக்கிறார்.

அனைவரிடமும் விசாரணை!

போலீஸாரிடம் விசாரித்தபோது, ‘‘பெங்களூருவில் அம்பலிபுரா பகுதி அருகே வசித்து வந்த பிரதீப், தன்னுடைய உறவினர்களுடன் புத்தாண்டு விருந்துக்கு நெட்டிகெரேயில் உள்ள ரிசார்ட்டில் இருந்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை (நேற்று) காலை, சிராவுக்குச் செல்வதாகக் கூறி பிரதீப் ரிசார்ட்டிலிருந்து வெளியேறியதுடன், அம்பலிபுராவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பின்னர் ரிசார்ட்டுக்கு திரும்பிய அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை தன்னுடைய உறவினர்கள் நெட்டிகெரேயிலிருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, காருக்குள் தற்கொலை செய்துகொண்டார். பிரதீப் தன்னை தாக்கியதுடன், துப்பாக்கியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்ததாக, அவருடைய மனைவி நமீதா கொடுத்த புகாரும் நிலுவையில் இருக்கிறது. பிரதீப் மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கிறோம், அவர் குறிப்பிட்டிருக்கும் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர் விரிவாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.