திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பாக இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக் கலைகள் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இந்த கலைமாமணி விருதுகள் 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
கடந்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது நிகழ்ச்சி 2021ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தகுதி இல்லாதவர்களுக்கு கலை மாமணி விருது வழங்கப்பட்டது. மேலும் கலைமாமணி விருது வழங்கப்பட்ட சான்றிதழில் தலைவர், செயலாளர், உறுப்பினர்களின் கையொப்பம் இல்லாமல் அவசரகதியில் வழங்கப்பட்டது. தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டதை திரும்ப பெறக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் பொதுநல வழக்கை சமுத்திரம் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் “2019-2020ஆம் ஆண்டுகளில் கலைமாமணி விருது வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது குறித்து தேவைப்படும் பட்சத்தில் உரிய தேர்வு குழு அமைத்து ஆய்வு செய்யலாம். இந்த விருதுகள் வழங்கப்பட்ட நபர்களிடம் உரிய கால அவகாசம் வழங்கி விசாரணை மேற்கொண்டு உரிய ஆய்வு நடத்தி உரிய முடிவு தமிழ்நாடு அரசு எடுக்கலாம்” என தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.