திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 வருடங்களுக்கு முன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் சினிமா இயக்குனர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது நண்பர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் தினேசன். அவரது மகள் நயனா சூர்யா (28). மறைந்த பிரபல மலையாள சினிமா இயக்குனர் லெனின் ராஜேந்திரனிடம் 10 வருடங்களுக்கு மேலாக இணை இயக்குனராக பணிபுரிந்து வந்தார். கிராஸ் ரோடு என்ற ஒரு ஆந்தாலஜி படத்தில் பக்ஷிகளுடெ மரணம் என்ற பெயரில் ஒரு பகுதியை இவர் டைரக்ட் செய்து உள்ளார்.
இது தவிர லெனின் ராஜேந்திரனுடன் ஏராளமான மலையாளப் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதுதவிர பல விளம்பரப் படங்களையும் டைரக்ட் செய்து உள்ளார். திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் லெனின் ராஜேந்திரன் மரணமடைந்தார். அடுத்த மாதம் நயனா சூர்யா தனது வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து அறிந்ததும் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. ஆனால் நயனா சூர்யா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறி வழக்கை போலீசார் முடித்தனர்.
இந்தநிலையில் நயனா சூர்யா தற்கொலை செய்யவில்லை என்றும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது நண்பர்கள் புகார் கூறி உள்ளனர். நயனாவின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததாகவும், கழுத்துப் பகுதியில் 31.5 செமீ அளவுக்கு லேசான வெட்டுக்காயம் உள்பட சில காயங்கள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று நயனாவின் நண்பர்கள் கூறுகின்றனர். இவர் ஆலப்புழா அருகே மணல் கொள்ளைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். எனவே நயனா சூர்யாவின் மர்ம மரணம் குறித்து மீண்டும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.