சபரிமலைக்கு படையெடுக்கும் பக்தர்கள் கூட்டம்: 8ஆம் தேதி வரை ஹவுஸ்ஃபுல்!

கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பக்தர் கூட்டம் பெருமளவில் படையெடுக்கும். சபரிமலை கேரளாவில் இருந்தாலும், கேரளாவை விட தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து தான் பெரியளவில் பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் மண்டல சீசன் கடந்த மாதம் 27ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு அன்று தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்த 90 ஆயிரம் பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். இதுபோக உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் தரிசனம் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும். மேலும் 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் 8ஆம் தேதி வரை தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

இதனால் அன்றைய நாட்களில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய முடியாது. சபரிமலையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சில பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வருகிறார்கள். இவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடி முன்பதிவு அடிப்படையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் இதனை தவிர்க்கும்படி அய்யப்ப பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சபரிமலையில் விமான நிலையம்!

சபரிமலை அருகே விமான நிலையம் அமைப்பதற்கு 2570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அனுமதி வழங்கி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சபரிமலை அருகே உள்ள எருமேலியில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதியில் கே.பி.யோகன்னான் என்ற பாதிரியார் நடத்தி வரும் பிலீவர்ஸ் சர்ச் என்ற கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான 2263 ஏக்கர் பரப்பளவுள்ள செறுவள்ளி எஸ்டேட் நிலம் விமான நிலையத்திற்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.