சுபஸ்ரீ பிரேத பரிசோதனை அறிக்கை… கோவை ஈஷா யோகா மர்ம மரணத்தில் பகீர் தகவல்!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ (34), செம்மேடு பகுதியில் பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக உடல் கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவுகள்

அங்கு சிறப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், சுபஸ்ரீ உயிரிழந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம். நுரையீரலில் நீர் இறங்கியுள்ளது. அவரது உடலில் எந்தவித காயங்களும் இல்லை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா?

இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்ற குழப்பம் கோவை போலீசார் மத்தியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அடுத்தகட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுபஸ்ரீயின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த பழனிகுமார் என்பவரின் மனைவி சுபஸ்ரீ. இவர்கள் இருவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. சுபஸ்ரீ சைலன்ஸ் என்ற யோகா பயிற்சியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா யோகா மையத்தில் பெற்றார். பின்னர் மற்றொரு பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டார்.

இதற்காக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி முதல் சென்றுள்ளார். டிசம்பர் 18ஆம் தேதி பயிற்சி முடிந்த நிலையில் அவரை அழைத்து செல்ல கணவர் பழனிகுமார் வந்தார். யோகா மையத்தின் வாயிலில் நீண்ட நேரம் காத்திருந்தும் சுபஸ்ரீ வரவில்லை. செல்போனையும் எடுக்கவில்லை. உள்ளே சென்று விசாரித்தால் பயிற்சி காலையிலேயே முடிந்து விட்டது என்றும், தற்போது மையத்தில் யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சிக்கிய சிசிடிவி ஆதாரம்

பின்னர் சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டதில் காலையிலேயே சுபஸ்ரீ ஈஷா யோகா மையத்தின் மற்றொரு கேட் வழியாக வெளியே செல்வது தெரியவந்தது. இதனால் குழப்பம் அடைந்த பழனிகுமார் என்ன செய்வதென்று தெரியாமல் காத்திருந்தார். அப்போது புதிய நம்பரில் இருந்து கால் வந்துள்ளது. ஆனால் அதை எடுக்க முடியவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அந்த நம்பரை தொடர்பு கொண்டு கேட்கையில், தனது கணவரிடம் பேச வேண்டும் என ஒரு பெண் வந்தார்.

ஆனால் கால் எடுக்கவில்லை எனக் கூறி சென்றுவிட்டதாக எதிர் முனையில் பேசிய நபர் கூறினார். இந்த விஷயம் குறித்து ஆலாந்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணையில் இறங்கினர். 6 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இந்நிலையில் தான் நேற்று செம்மேடு அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.