டெல்லி உட்பட பல மாநிலங்களில் போராட்டம் நடத்திய ஜைன மதத்தினர்! காரணம் என்ன?

தலைநகர் டெல்லியில் ஜைன மதத்தினர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தின் பரஸ்நாத் மலைகளில் மீது அமைந்துள்ளது, சமத் ஷிகர்ஜி. இது, ஜைன மக்களின் மிகப்பெரிய புனித ஸ்தலமாகும். இந்த பரஸ்நாத் மலைப் பிரதேசத்தை, சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில், அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் எடுத்திருக்கும் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக ஜைன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அதேபோல், குஜராத் மாநிலம் பாலிதானாவில் உள்ள ஜைன மதக் கோயிலும் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறி அதற்கு எதிராகவும் ஜைன மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், ஜைன மதத்தின் புனித தலமான பாலிதானாவில் பாஜக அரசு, குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால், அங்கு கோயில் மற்றும் மடங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன், மது மற்றும் மாமிசங்களும் அங்கு விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஏற்கெனவே குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், இந்தப் புனிததலம் அருகே மது விற்பனை சட்டவிரோதமாக நடைபெறுவதாலும், கோயில் சேதப்படுத்தப்பட்டிருப்பதாலும் ஜைன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள், ”ஜார்க்கண்ட் அரசின் இந்த முடிவிற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். அதுபோல், குஜராத்தில் கோயிலைச் சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான ஜைன மதத்தினர் நேற்று (டிசம்பர் 1) ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். அவர்கள் இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமும் நேற்று (டிசம்பர் 1) கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.