தங்க தகடு பொருத்த 6 மாதங்களுக்கு திருப்பதி கோயில் மூடப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது: தேவஸ்தானம் அறிக்கை

திருமலை: விமான கோபுரத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்திலிருந்து நடைபெற உள்ளதால், 6 மாதங்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என வரும் வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் விமான கோபுரத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இதனால், 6 மாதங்கள் வரை கோயில் மூடப்படுகிறது என சிலர் சமூக வலைத்தளங்கள் மூலமாக பொய்யான தகவல்களை பரப்பி விடுகின்றனர். இது தொடர்பாக நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரதான அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால் தீட்சிதர் தேவஸ்தானம் சார்பில் நேற்று மாலை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் மார்ச் 1-ம் தேதிமுதல் தொடர்ந்து 6 மாதங்கள் வரை மூடப்படுவதாக சிலர் வீண்வதந்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதை நம்பவேண்டாம். திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை தீர்மானம் செய்தபடி, வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் கோயில் தங்க விமான கோபுரத்தில் தங்க தகடுகள் பொருத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. ஆதலால், கடந்த 1958 மற்றும் 2018ம் ஆண்டு நடந்த பாலாலய பணிகள் மீண்டும் ஆகம விதிகளின்படி நடைபெற உள்ளது. ஆனால், மூலவர் தரிசனம் நிறுத்தப்பட மாட்டாது. இந்த கால கட்டத்தில், பாலாலயம் கோயில் அருகே ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் மூலவரையும், பாலாலய கோயிலையும் தரிசனம் செய்யலாம். காலை முதல் இரவு வரைஅனைத்து சேவைகளுமே ஏகாந்தமாக நடைபெறும். திருக்கல்யாணம், ஆர்ஜித பிரம்மோற்சவ சேவை போன்றவை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பருக்கு நடத்தப்படும்.

திருப்பணிகள் நடந்து முடிந்தபின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.