சென்னை: தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு ஆளுநர் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர் கே.வி.ஸ்ரீனிவாசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிக்கை,சமூக நலனுக்காக அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: பத்திரிகைத் துறையில் 30 ஆண்டுகளாக புகைப்பட கலைஞராக அனுபவம் வாய்ந்தவரும், தற்போது தி இந்து ஆங்கில நாளிதழில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வரும் கே.வி.சீனிவாசன் (வயது 56) அவர்கள் இன்று காலை (02.01.2023) திடீர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: தி இந்து, பைனான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், போன்ற பத்திரிக்கைகளில் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன், பணியில் இருந்தபோதே மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தி இந்து ஆங்கில நாளிதழின் மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் இன்று அதிகாலை சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி குறித்த நிகழ்வுகளை படம் பிடித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இதழியல் துறையினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்து ஆங்கில நாளேட்டில் நீண்டகாலமாக பணியாற்றிய புகைப்படக் கலைஞர் கே.வி. சீனிவாசன் திடீரென காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். புகைப்படங்களை வெளியிடுவதில் இந்து நாளேட்டிற்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதை பாதுகாக்கிற வகையிலும், அந்த நாளேட்டிற்கு ஏற்ற வகையிலும் புகைப்படங்களை எடுப்பதில் மிகுந்த ஆற்றல்மிக்கவராக பணியாற்றியவர். புகைப்படக் கலைஞராக மிகச் சிறப்பாக பணியாற்றிய கே.வி. சீனிவாசன் மறைவு இந்து குழுமத்திற்கும், பத்திரிகை துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்து குழுமத்திற்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.