தோட்டா பாய்ந்து வாலிபர் பலி ; சுட்டவர் மாரடைப்பால் மரணம்| Youth shooter dies of heart attack after bullet escapes

ஷிவமொகா : ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து,வாலிபர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவரும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

கர்நாடக மாநிலம் ஷிவமொகா வித்யா நகரில் வசித்தவர் மஞ்சுநாத் ஓலேகார், 67. இவர் தன் வீட்டு மாடியில் ஆங்கில புத்தாண்டு மற்றும் மகன் பிறந்த நாளை கொண்டாட நேற்று முன்தினம் இரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றிருந்தனர்.

நள்ளிரவு 12:00 மணி ஆனதும், ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் நோக்கில் மஞ்சுநாத் ஓலேகார் தன் வீட்டில் இருந்த உரிமம் பெற்றிருந்த இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்து வந்து அதில் தோட்டாக்களை நிரப்பி கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்ததில், பார்ட்டிக்கு வந்திருந்த இவரது நண்பரின் மகன் வினய், 34, மீது குண்டு பாய்ந்தது.

படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தன் தவறால் ஏற்பட்ட அசம்பாவிதத்தை பார்த்த அதிர்ச்சியில், மஞ்சுநாத் ஓலேகாருக்கு, மாரடைப்பு ஏற்பட்டது.மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, குடும்பத்தினர் தயாரான போது அவர் உயிரிழந்தார். இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்த வினய்யும், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.