2016-ல் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகப் பிரதமர் மோடியால் திடீரென ரூ.500, ரூ.1,000 செல்லாது என நடைமுறைப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இன்றுவரை அரசியல் கட்சிகள் பலவும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேசமயம் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு 4:1 என்ற விகிதத்தில், “மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே” என இன்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பால், பா.ஜ.க தலைவர்கள் பலரும் தற்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்த எதிர்க்கட்சிகளை விமர்சித்துவருகின்றனர்.

அந்த வரிசையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான ரவிசங்கர் பிரசாத், “தேசத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவை உச்ச நீதிமன்றம் செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான தன்னுடைய குரலுக்காக ராகுல் காந்தி இப்போது மன்னிப்பு கேட்பாரா… வெளிநாட்டில்கூட அவர் இதற்கெதிராகப் பேசினார்” எனச் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாகரத்னா, “நாட்டின் மறு உருவமாக நாடாளுமன்றம் விளங்குகிறது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்பே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்” என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.