சென்னை: சென்னை மாநகராட்சி பூங்காக்களின் பராமரிப்பில் காணப்படும் குறைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணிலும், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களிலும் தெரிவிக்கலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 786 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஒப்பந்த முறையிலும், தத்தெடுப்பு முறையிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 584 பூங்காக்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாகப் பராமரித்தல், புல்வெளி அல்லது செடிகள் அடர்த்தியாக உள்ள இடங்களில் வறண்டு அல்லது வளர்ச்சியின்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக செடி கொடிகளை உடனடியாக நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தகுதியுடைய தேவையான எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமித்தல், பார்வையாளர்கள் புகார்களைத் தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பராமரிப்பிலுள்ள 584 பூங்காக்களில் பராமரிப்பு பணிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டது. அதனடிப்படையில் மாநகராட்சி அலுவலர்கள் களஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள், பூங்கா கழிப்பறைகள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் எரியாத மின்விளக்குகள் ஆகியவற்றை உடனடியாக சரிசெய்ய மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தனியார் மூலம் பராமரிக்கப்படும் மாநகராட்சி பூங்காக்களில் இதுவரை பழுதடைந்திருந்த 380 சிறுவர் விளையாட்டு உபகரணங்களில் 217 விளையாட்டு உபகரணங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. பழுதடைந்த மற்றும் எரியாத 917 மின்விளக்குகளில் 188 விளக்குகள் சரிசெய்யப்பட்டுள்ளன. பழுதடைந்த 64 திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களில் 48 உடற்பயிற்சி உபகரணங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், பூங்கா கழிப்பறைகளில் 2 கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததது கண்டறியப்பட்டு அவை சரிசெய்யப்பட்டுள்ளது. பூங்கா கழிப்பறைகளில் எரியாமல் இருந்த 24 விளக்குகள் சரிசெய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பழுதுகள் அனைத்தையும் சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சி பூங்காக்களின் பராமரிப்பில் காணப்படும் குறைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணிலும், தொடர்புடைய மண்டல அலுவலகங்களிலும் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.