புதுடில்லி: ‛ பாரத் ஜோடோ யாத்திரை’ யில் கா ங்., எம்.பி ராகுலின் அழைப்பை ஏற்று, கடந்த டிச24 -ல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பங்கேற்றார். டில்லியில் கமலுடன் கலந்துரையாடிய வீடியோவை ராகுல் யூடியுப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் இருவரும் விவாதித்த விஷயங்கள் விவரம் வருமாறு:
ராகுல்
கமலுடனான உரையாடலில் ராகுல் பேசியதாவது: தேர்தல்களை மனதில் வைத்து நான் அரசியல் செய்வதில்லை என பலர் கூறுகிறார்கள். தேர்தல்களை இன்னும் சிரத்தையுடன் கையாள வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
இளைஞர்கள், பெருவாரியான மக்கள் தொகை, மேற்கத்திய நாடுகளில் தேவைக்கதிகமான வளம் உள்ளது. நாம் சீனாவைப் போல வருவதற்கு நமக்கு மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், அரசியலில் இன்னொரு வேலையும் இருக்கிறது.
மக்களை ஒன்றிணைக்க வேண்டும். மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். மக்களிடம் அன்பு செலுத்த வேண்டும்; அது முக்கியமான வேலை என கருதுகிறேன்.
உலகின் முன்னணி உற்பத்தியாளராக நம்மால் மாற முடியும். மேற்கத்திய நாடுகளிடம் தலை சிறந்த உற்பத்தி நிலையங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
அவர்களால் பெரிய அளவிலான உற்பத்தியில் சீனாவுடன் போட்டி போட முடியாது. இது தான் பரிதாபத்திற்குரிய நிலை. நாம் தெருக்களில் நடக்கும் போது பார்க்கிறோம். நமது குழந்தைகள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். ஆனால் நமது விவசாயத்தில் பெரும் வேலைவாய்ப்பு வசதிகள் உள்ளது.
தமிழக மக்கள் அன்பு
தமிழக மக்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது ; அவர்கள் காட்டும் அன்பும் பாசமும் மற்ற மாநில மக்களை தாண்டி என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. தமிழர்கள் அன்பு காட்டும் விதம் உண்மையிலேயே வித்தியாசமானது.
நமது முதல்வர்களையும், தலைவர்களையும் எடுத்து கொண்டால், பல ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கின்றனர். நினைத்ததை செய்ய நினைக்கின்றனர். மக்களின் எண்ணத்தை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

கமல்ஹாசன்
ராகுலுடன் உரையாடலில் கமல்ஹாசன் பேசியதாவது:
மத நம்பிக்கையில்லாத, கடவுள் இல்லை என்று என்று சொல்பவர்கள் கூட தமிழைக் கொண்டாடுவார்கள், வணங்குவார்கள். தமிழர்களின் கலாசாரம் மிகவும் தொன்மையானது. தொடர்ந்து விவசாயத்தை உதாசீனப்படுத்துவது தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் சார்ந்திருக்கும் திரைப்படத்துறையை பற்றி கூறுகிறேன். ஒரு திரைப்படத்தில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கான பயிற்சி மையங்களைப் பார்த்தால் அதற்கென ஒரு ஐடிஐ கூட கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

கமலுக்கு பரிசு வழங்கிய ராகுல்:
புலி தண்ணீர் குடித்து கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பரிசாக கமலுக்கு, ராகுல் வழங்கினார். ” கமல் யாரென்பதை இது பிரதிபலிக்கும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை இது குறிக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த இந்தியர், சிறந்த தமிழர் இவ்வாறு ராகுல் இந்த படம் குறித்து விளக்கினார்..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்