வைகுண்ட ஏகாதசியின் போது கிராம மக்கள் இரவில் கண்விழிக்க வேண்டும் என்பதற்காக இன்றும் சரித்திர நாடகங்களை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொக்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுது போக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் அருகே உள்ள கொல்லாங்கரை கிராமத்தில் ஏகாதசியின் போது மூன்று நாட்களுக்கு சரித்திர நாடகங்களான இராமாயணம், வள்ளி திருமணம், ருக்மாங்கதன், சத்தியவான் சாவித்ரி போன்ற நாடகங்கள் நடத்தப்படுகிறது.
இந்த நாடகங்களுக்குத் தேவையான கதாப்பாத்திரங்களுக்குரிய கலைஞர்களாக கிராம மக்களே நடித்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
