புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலின் வாரணாசி மற்றும் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் ேமாடி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி கடந்த 2019ல் நடந்த பொதுத் தேர்தலின்போது உ.பி மாநிலம் வாரணாசியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளில் பாஜ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியாக ஆய்வு செய்து, அதன் வெற்றி தோல்விகளை பாஜ தலைவர்கள் அலசி வருகின்றனர். அத்தோடு கட்சியின் மூத்த தலைவர்கள் எங்கு போட்டியிட வேண்டும் என்பது பற்றிய பட்டியலையும் அவர்கள் தயாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி 2024 மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பாஜ தீவிரமாக பரிசீலித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதில் ஒன்று வாரணாசி தொகுதி. மற்றொன்று தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில் காசியில் தமிழ் சங்கமம் நடத்தியது இதற்கு அச்சாரம் போடுவதற்காக தான் என்று பாஜவினர் கூறியதாக தி சண்டே கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.