லோனி: “அம்பானியும், அதானியும் இந்த தேசத்தில் தலைவர்களை, ஊடகங்களை விலைக்கு வாங்கியிருக்கலாம்; ஆனால், அவர்களால் என் சகோதரரை விலைக்கு வாங்க முடியாது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்திவருகிறார். இந்த யாத்திரை இன்று உத்தரப் பிரதேசத்தில் நுழைந்தது. உத்தரப் பிரதேசத்தின் லோனியில் யாத்திரையை பிரியங்கா காந்தி வரவேற்றார். அப்போது பேசிய அவர், “எனது சகோதரர் ஒரு போராளி. நான் அவரை நினைத்து மெருமைப்படுகிறேன். இதுவரை அவர் 3000 கி.மீ யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்.
அம்பானியும், அதானியும் இந்தியத் தலைவர்களை விலைக்கு வாங்கியிருக்கலாம். பொதுத்துறை நிறுவனங்களையும் ஊடகங்களையும் விலைக்கு வாங்கியிருக்கலாம். ஆனால் அவர்களால் என் சகோதரரை விலைக்கு வாங்க முடியவில்லை. அவ்வாறு வாங்கவும் முடியாது. வெறுப்பு அரசியலும், பிரிவினை அரசியலும் நீடித்தால் மக்கள் பிரச்சினை தீராது. உங்கள் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீராது. நாட்டின் பொருளாதாரம் முன்னேறாது.
என் சகோதரரின் மாண்பை சிதைக்க இந்த அரசாங்கம் கோடி கோடியாக செலவழித்தது. ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. எனது சகோதரர் உண்மையின் பாதையில் நடக்கிறார். இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் அனைவரும் உங்களுடன் ஒற்றுமையின், அன்பின், மரியாதையின் செய்திகளை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லுங்கள்.” என்றார்.
9 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் டெல்லியில் இன்று காலை யாத்திரை தொடங்கியபோது சிவசேனா ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதியும் கலந்து கொண்டார். அப்போது அவர், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிலைமையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
“நாட்டை ஒற்றுமைப்படுத்த ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்துகிறார். அந்த யாத்திரை வெற்றியடையும் வாய்ப்புகள் உள்ளன. இந்த 2023 வருடம் முதல் நம் நாடு அச்சத்திலிருந்து விடுதலை பெறும் என நம்புகிறேன். கன்னியாகுமரியில் தொடங்கி 2,800 கி.மீ தொலைவை கடந்த ராகுலின் புதிய சுறுசுறுப்பை டெல்லியிலேயே முடக்கிவிட ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், அதனை முறியடித்து யாத்திரையை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்த உள்ளார் ராகுல் காந்தி” என்று சிவசேனாவின் அதிகாரபூர்வ இதழான சாம்னாவில் குறிப்பிட்டிருந்த நிலையில், இன்று சிவசேனா ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதியும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பற்றி பேசியிருக்கிறார்.
முன்னதாக, வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் முயல்கிறது. இதற்கு ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் ஆதரவு அளிக்கும் விதமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.