ஆன்லைன் சூதாட்டத்துக்கு மத்திய அரசு ஆதரவா? – தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் திமுக சார்பில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்று மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், ”ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துகின்றவர்களை பாதுகாக்கின்ற சட்டமாகவோ, அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்கின்ற சட்டமாகவோ எதுவும் இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நோக்கம். முழுமையாக ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். அதையே நாங்கள் வலியுறுத்துவோம். மத்திய அரசு ஆன்லைன் ரம்மி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையை படித்துவிட்டு இது குறித்து முழுமையாக கருத்து தெரிவிக்கப்படும்.

image
தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதை அடிப்படையாக வைத்து ஒன்றிய அரசு தனது சட்டத்தை கொண்டு வந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும். அதை விடுத்து ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துபவர்களை பாதுகாக்கின்ற வகையில் மறைமுகமாக செய்கின்ற செயலாக அது இருந்தால் நிச்சயமாக அது கண்டிக்கத்தக்கதாக இருக்கும்” என்றார்.
பின்னர் பேசுகையில், “தமிழகத்திலேயே ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடைபெறும். அதன்படி வருகின்ற ஆறாம் தேதி கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டு போட்டி முறைப்படி நடத்தவே ஆன்லைன் பதிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆன்லைன் பதிவை ஏற்று தேதியை முறைப்படுத்தி பதிவு செய்வதை விழா நடத்துபவர்கள் செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இன்சூரன்ஸ் கட்டாயம். விழா நடத்துபவர்களை இன்சூரன்ஸ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் இன்சூரன்ஸ் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.