'எல்லை ஒப்பந்தத்தை மதிக்காத சீனா' – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

“எல்லை ஒப்பந்தங்களை சீனா மதிக்காத காரணத்தால் தான் பதற்றம் நிலவுகிறது,” என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்து பேசிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாதுகாப்பு, சர்வதேச அமைதி, வர்த்தகம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

இதற்கிடையே, தினசரி பத்திரிகை ஒன்றிற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேட்டி அளித்தார். அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து தெரிவித்து உள்ளார்.

அதன் விபரம்:

ஓட்டல் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து சென்ற மும்பையை தாக்கிய நாடு தான் பாகிஸ்தான். தினமும் பயங்கரவாதிகளை எல்லை தாண்டி அனுப்பி வைக்கிறது. அந்த நாடு பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக உள்ளது. அந்த நாடு குறித்து, மையப்புள்ளி என்ற வார்த்தையை விட கடினமான வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை. இந்த நாடு தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்த காரணம் ஆக இருந்தது.

பாகிஸ்தான் தனது இறையாண்மையை காக்கும் என நம்புகிறேன். பட்டப்பகலில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவதுடன், அதற்கு நிதியுதவி மற்றும் ஆட்சேர்ப்பும் நடக்கிறது. அப்படியிருக்கையில், அதனை தெரியாது என பாகிஸ்தான் சொல்ல முடியுமா? குறிப்பாக, பயங்கரவாதிகள், ராணுவ ரீதியில் பயிற்சி பெறுகிறார்கள். எல்லையில் படைகளை குவிக்கக் கூடாது என சீனா உடன் ஒப்பந்தம் போட்டிருந்தோம். ஆனால், சீனா அதனை மதிக்கவில்லை. இதனால் தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தன்னிச்சையாக மாற்றக்கூடாது எனவும் ஒப்பந்தம் இருந்தது. அதனையும் சீனா மதிக்கவில்லை. எந்த நியாயம் இல்லாத ராணுவ அழுத்தத்தின் அளவை இந்தியா பார்த்துள்ளது. இன்று நிறைய வெளிப்படை தன்மை அதிகம் உள்ளதால், ஆவணங்கள் தெளிவாக உள்ளன. உங்களிடம் செயற்கைக்கோள் படங்கள் உள்ளன. முதலில், எல்லை பகுதிகளுக்கு படைகளை நகர்த்தியது யார் என பார்த்தால், ஆவணங்களில் மிக தெளிவாக இருக்கும்.

இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.