கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர்.சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடைமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.
பள்ளியை திறக்கக்கோரி தாளாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர் 5ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளியை திறக்க அனுமதியளித்து கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பள்ளி தரப்பில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட்ட பின்பு, எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும், பிற வகுப்புகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இதுபோன்ற சம்பவம் இனி எந்த மாணவருக்கும் நடக்காது என என்ன உத்தரவாதம் உள்ளது எனவும் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா எனக் கேள்வி எழுப்பினார்.
இதர பதிலளித்து இதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு தரப்பில், பள்ளி திறப்பட்ட பின்பு உள்ள நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய அவசாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று ஜனவரி 10ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மீண்டும் பள்ளியை முழுமையாக திறக்கும் போது, மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.