செந்தில் பாலாஜி அடுத்ததாக இணையப்போகும் கட்சி எது? தங்கமணி தகவல்!

கரூரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

கரூர் மாவட்ட அதிமுக அவை தலைவர் திரு.வி.க கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளில் அதிமுக மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் சிவராஜ் திமுக பிரமுகர் ஒருவரால் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு மீட்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக திமுக அரசை கண்டித்து கரூரில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர்

அறிவித்திருந்தார்.

அதன்படி, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கண்டன பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், “தொண்டர்களை பாதுகாக்கும் தலைவர் எடப்பாடி பழனிசாமி. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதிமுக தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். கரூர் தனி மாநிலமாக உள்ளது. ஏனென்றால் இங்குள்ள அதிகாரிகள் தனி அரசாங்கம் நடத்தி வருகிறார்கள். கரூரில் உள்ள உளவுத்துறை செந்தில் பாலாஜியின் ஆட்கள். முதலமைச்சருக்கு கூட தகவல் சொல்ல மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார். தவறு செய்யும் அதிகாரிகள் எங்கு இருந்தாலும் விடமாட்டோம். செந்தில் பாலாஜி அடுத்ததாக இணையப்போகும் கட்சி பாஜக.” என்றார்.

மேலும், “ஸ்டாலின் குடும்பமே செந்தில் பாலாஜியை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுக்கிறேன். செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவிதான்.” என்றும் தங்கமணி தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசுவையில், “சீனியர் அமைச்சர்களுக்கு முக்கியத் துறைகளை கொடுத்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்து முக்கியத்துறைகளை ஜுனியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்து உள்ளார். மூத்த அமைச்சர்களுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்பு கொடுக்க வில்லை. ஏனென்றால் சரியாக கப்பம் கட்டமாட்டார்கள். அதற்கு தகுந்தவர் செந்தில் பாலாஜிதான். அவர்தான் சரியாக கப்பம் கட்டுவார்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு அதிகாரிகள் அதிகார வரம்பை நேர்மையாக பயன்படுத்துங்கள். இல்லை என்றால் அரசியல்வாதிகளை தாண்டி அதிகாரிகள் நோக்கி எங்கள் போராட்டம் நடைபெறும். காவல்துறை பொய் வழக்கு போட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எங்கள் போராட்டம் நடைபெறும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.