தமிழகத்தின் கல்வி குழு எடுக்கும் முடிவையே கல்வித்துறை பின்பற்றும்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 1895 கௌரவ விரிவுரையாளர்களை நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கும் பணி இன்று துவங்கியது. முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்முகத் தேர்வு இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மண்டல கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்காக 318 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 76 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது.1895 கௌரவ விரிவுரையாளர் பணிக்காக 9915 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியை ஆய்வு செய்தபின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 20 மாத திமுக ஆட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் பேர் நிரந்தர பணியாளர்களாகவும்,1895 பேர் கௌரவர் விரிவுரையாளர்களாகவும் நியமிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இட ஒதுக்கீடு எல்லாம் சரியாக பின்பற்றப்படவில்லை என்றார்.

1895 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 9915 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில் PHD, JRF மற்றும் NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து தகுதியின் அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். 9915 விண்ணப்பங்களுக்கும் படிப்பு தகுதியின் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

பொது பிரிவினருக்கு நாளை முதல் தரவரிசையின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்றார்.
நாளை முதல் பொது பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு  நடைபெற உள்ளது என்றார்.

கேரளா மற்றும் பாண்டிச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போல தமிழகத்தில் நியமிக்கப்படும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் நிதி நிலைமைக்கு ஏற்ப பின்னர் சம்பளம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அடுத்த ஆறு மாதங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்ட  நான்காயிரம்  பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை செய்ய பல்கலைக்கழக மானிய குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களைச் சார்ந்த துணைவேந்தர்கள் கலந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை. தமிழகத்தின் கல்வி குழு எடுக்கும் முடிவையே கல்வித்துறை பின்பற்றும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.