தமிழகத்தில் போதைப் பொருள்களை தடுக்க என்ன வழி? முதல்வர் ஆய்வு கூட்டம்!

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பல இடங்களில் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இலங்கையிலிருந்து ஒரு போதைக் கும்பல் தப்பித்து இந்தியாவுக்குள் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் முதலமைச்சர்

தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

போதைப் பொருள் ஊடுருவலை எவ்வாறு தடுப்பது, அதற்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, மாணவர்களை போதையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்திறை முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.