சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விபத்துகள், உயிரிழப்புகளுக்கு போக்குவரத்து விதிமீறல்களே முக்கியக் காரணம் என்பதை கருத்தில்கொண்டு, மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களைக் கொண்டுவந்தது. அதன்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் பயணித்தால் ரூ.1,000, கார்களில் சீட்பெல்ட் அணியாமல் பயணித்தால் ரூ.1,000, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல், உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சென்னையில் கெடுபிடியாக அபராதம் வசூலிக்கப்பட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சிக்னல்களில், போக்குவரத்து போலீஸார் ஆங்காங்கே மறைந்து நின்றுகொண்டு, திடீரென வாகனங்களின் குறுக்கே ஓடிவந்து மறிப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கூறியதாவது:
சைதை ரவிக்குமார்(28): இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்தே போக்குவரத்துப் போலீஸார் அபராதம் வசூலிக்கின்றனர். வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், பின்னால் அமர்ந்திருப்பவர் அணியவில்லை என்றுகூறி ரூ.1,000 அபராதம் விதிக்கின்றனர். பல்வேறு ஆவணங்களைக் கேட்டு நெருக்கடி தருகின்றனர். அபராத அச்சுறுத்தலைத் தவிர்க்க, லஞ்சம் தரவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாணவர்கள், இளைஞர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் நேரடியாக பெற்றோரின் வருமானத்தை பாதிக்கிறது.
நீலாங்கரை பாலகுரு (31): அனைத்து ஆவணங்கள் இருந்தாலும், சாலையோரம் நிற்க வைத்து அனுப்புகின்றனர். வாகனத்தில் செல்பவரின் சூழல், அவசரத்தை போலீஸார் பொருட்படுத்துவதே இல்லை. அபராதம் அல்லது லஞ்சம் வசூலிப்பதே பிரதான நோக்கமாக இருக்கிறது.

நம்பர் பிளேட் பிளாஸ்டிக்கால் வைக்கப்பட்டுள்ளது என கூறி ரூ.500 அபராதம் விதித்தனர். ‘வாகன எண்
தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. ஆனால், குற்றவாளிபோல
சூழ்ந்து கொண்டு விசாரணை என்ற பெயரில் என்னை அச்சுறுத்துகின்றனர்’ என ஆவேசமாக கூறிய
வாகன ஓட்டி, கோபத்தில் தனது காரில் வைத்திருந்த நம்பர் பிளேட்டை எட்டி உதைத்தார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வர்கீஸ் (37): சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைத்து, வாகன நெரிசலைக் குறைத்தாலே விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்துவிடும். அதைவிடுத்து, உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை வசூலிப்பது ஏற்புடையது அல்ல. சாதாரண மக்களின் சம்பளத்தைவிட அபராதத் தொகை அதிகமாக உள்ளது. எனவே, அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஐ.டி. நிறுவன ஊழியர் ஸ்டாலின்: ரூ.1,000 அபராதம் செலுத்துபவர் மாணவராகவோ, இளைஞராகவோ இருந்தால், அவருக்கு ஒருமுறை மட்டும் ஹெல்மெட் தரலாம். அடுத்தமுறை ஹெல்மெட் அணியாமல் வந்தால், கெடுபிடி நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு ஆக்கப்பூர்வமாக சிந்திக்காமல், சாலைகளில் வழிமறித்து அபராதமோ அல்லது லஞ்சமோ வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இதுதொடர்பாக போக்கு வரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கூறும்போது, “ஹெல்மெட் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குகளை பதிவு செய்ய வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதை நாங்கள் செய்யவில்லை என்றால், அதிகாரிகளால் கண்டிக்கப்படுகிறோம். எனவேதான், கெடுபிடி காட்ட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறோம்’’ என்றார்.
காவல் ஆணையர் கவனிப்பாரா? – ஹெல்மெட் அணியாவிட்டால் போலீஸாரிடமும் அபராதம் வசூலிக்க வேண்டுமன்ற உத்தரவு, போலீஸாரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து போலீஸார் சிலர், சட்டம் – ஒழுங்கு போலீஸாரை சீண்டுவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை, அக்கறையுடன் கூடிய தனது மென்மையான அணுகு முறையால் போலீஸார் மத்தியில் கவனம் பெற்றிருக்கக்கூடிய காவல் ஆணையர், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவதுடன், விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே போல, லஞ்சத்தை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.