இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு? உச்சகட்ட ட்விஸ்ட்!

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தங்கள் பக்கம் தான் ஒட்டுமொத்த அதிமுகவும் இருப்பதாக கூறிவருகின்றனர். இருவரும் தங்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுகின்றனர்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் நான் தான் என எடப்பாடி பழனிசாமியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓ.பன்னீர் செல்வமும் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மறைந்தது அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

இளம் வயதில் திருமகன் ஈவெரா திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருமகன் மறைவைத் தொடர்ந்து இன்னும் சில வாரங்களில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்படும் போது ஓபிஎஸ் அணியும், இபிஎஸ் அணியும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரும் சூழல் உருவாகும். அதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

அவ்வாறு ஓபிஎஸ் அணியும், இபிஎஸ் அணியும் தனித்தனியே களம் கண்டால் யாருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பது தெரிந்துவிடும். அந்த தேர்தல் முடிவுகள் அதிமுக உட்கட்சி பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.