சீனிவாச சந்திரா : சீனிவாச சந்திரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜோடி கிருஷ்ணாபுரா கிராம ஏரியை குப்பை கிடங்காக மாற்றியுள்ளனர். இதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தங்கவயலில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் சீனிவாச சந்திரா உள்ளது. இதன் சர்வே எண்: 35, ஜோடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 8.29 ஏக்கரில் ஏரி உள்ளது.
சீனிவாச சந்திரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் குவியும் குப்பைகளை கொண்டு கொட்டுவதற்கு அரசின் வருவாய்த் துறையினர் ‘பீளவாரா’ என்ற இடத்தில் 8 ஏக்கரில் குப்பை கிடங்கு ஏற்படுத்த நிலம் ஒதுக்கினர்.
ஆயினும், இந்த குப்பைகளை ஜோடி கிருஷ்ணாபுரம் ஏரியில் கொண்டு போய் கொட்டி ஏரியை நாசப்படுத்தி வருகின்றனர்.
இந்த இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகளை ஏரியில் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதியில் செல்வோர் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். சுற்றுப்புற சுகாதாரம் சீர்கெட்டுள்ளது.
இதனால் அருகிலிருக்கும் கிராமங்களில் நோய் பரவும் ஆபத்து உள்ளதென்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏரிகளை புனரமைக்கும் மத்திய அரசின், ‘அம்ருத் சரோவர்’ திட்டத்தில் சீனிவாச சந்திரா ஏரியும் உள்ளது.
ஆனால், ஏரியில் குப்பைகளை கொட்டி ஏரியின் பரப்பளவை சுருங்க செய்துள்ளனர். மேலும் சில நில ‘மாபியா’க்கள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்துஉள்ளனர்.
எனவே, ஏரி நிலத்தை மறு சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரிகளை துார்வாரி சீரமைக்க வேண்டும் என்று கிராமத்தினர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்