தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கடுவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர் மனைவி அனிதா. இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று சிறு குழந்தைகள் இருக்கின்றனர். அந்தோணிராஜ் தஞ்சாவூர் ரெட்கிராஸில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். கொரோனா காலத்தில் முழு நேரமும் அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டியதற்காக ஊக்கத் தொகையாக அரசு வழங்கிய சம்பளப் பணத்தை ரெட்கிராஸ் அமைப்பின் துணைத் தலைவரான முத்துக்குமார் என்பவர் தரவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார் அந்தோணிராஜ். இதையடுத்து, “யார்கிட்ட போனாலும் பணம் வாங்க முடியாது” எனத் தன்னை முத்துக்குமார் மிரட்டியதாகச் சொல்கிறார் அந்தோணிராஜ். இது குறித்த ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அந்தோணிராஜிடம் பேசினோம். “நான் ரெட்கிராஸில் ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரிந்தேன். 2020-ம் ஆண்டு கொரோனா கோரதாண்டவம் ஆடியது. அந்தச் சமயத்தில் 108 மற்றும் ரெட்கிராஸ் ஆம்புலன்ஸ் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. தனியார் ஆம்புலஸ் எதுவும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தினமும் ரூ.600 சம்பளம் என அரசு கூறியதன் அடிப்படையில் கொரோனா சமயத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தேன். என் மூன்று பிள்ளைகளும் அந்தச் சமயத்தில் கைகுழந்தைகளாக இருந்தனர். குழந்தைகளின் எதிர்காலத்தைக்கூட பெரிதாகக் கருதாமல் துயர் சூழ்ந்த நேரத்தில் சமூகத்துக்கு என்னாளான சேவையினை செய்ய வேண்டும் என உயிரைப் பணயம் வைத்து ஆம்புலன்ஸ் ஓட்டினேன்.
2021-ல் மொத்தம் ஏழு டிரைவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டிவந்தோம். 2020-ல் இரண்டு மாதங்களுக்கும், 2021-ம் ஆண்டுக்கான சம்பளமும் எங்களுக்கு வர வேண்டியிருந்தது. எனக்கு மட்டும் ரூ.92,000 வர வேண்டும். இந்த நிலையில், மின்வாரியத்தில் உதவி மின் செயற்பொறியாளராகப் பணிபுரியும் ரெட்கிராஸின் துணைத் தலைவரான முத்துக்குமார் எங்களுக்கு வந்த சம்பள பணத்தைத் தராமல், அவரே வைத்துக்கொண்டார். நானும் மற்ற டிரைவர்களும் பணம் கேட்டு நடையாய் நடந்தோம்.
அவர்கிட்ட என்ன சார், உயிரைப் பணயம் வச்சு வேலை செஞ்ச பணத்தை தராமல் நீங்க வச்சிருக்கீங்க. ஏழைங்க வயித்துல அடிக்குறீங்களே இது நியாயமானு கேட்டும் பலனில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் சென்று மனு கொடுத்தேன். அதையடுத்து, என்னை அழைத்த முத்துக்குமார், `நீ கலெக்டரைப் பார்த்தாலும் சரி, யார்க்கிட்ட போனாலும் சரி… எப்படி பணம் வாங்குறேனு பார்த்து விடுகிறேன். நான் சொல்றதைத்தான் கலெக்டர் செய்வார்’ என திட்டினார்.

இந்த நிலையில், ரூ.80,000 தர வேண்டிய ஒரு டிரைவரை அழைத்து ரூ.50,000 மட்டும் கொடுத்தார். `என்ன சார் குறைத்து தருகிறீர்கள்’ என அவர் கேட்டதுக்கு, அவ்வளவுதான் என அனுப்பியிருக்கிறார். சம்பளம் குறித்து கேட்பதற்காக மற்ற டிரைவர்களை ஒருங்கிணைத்த எனக்கு போன் செய்த முத்துக்குமார், `என்னைப் பத்தி உனக்கு தெரியும், நீ கலெக்டர்கிட்டதான போவே… நான் பார்த்துக்கிறேன்’ என்றார். என் மனைவி பிரசவத்துக்காக தனியார் நிதி நிறுவனத்தில் எங்க வீட்டை அடமானம் வச்சிருந்தேன். அந்த பணத்தைக் கட்ட முடியாததால் வீட்டை ஜப்தி செய்றதுக்கு வந்துட்டாங்க. எனக்கு வர வேண்டிய பணத்தைப் பெற்றுதர வேண்டும் என முதல்வருக்கும் மனு அளித்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து முத்துக்குமாரிடம் பேசினோம். “என்னிடம் முன்கூட்டியே அந்தோணிராஜ் பணம் வாங்கியிருந்தார். செக் வந்ததுமே எங்கிட்ட வாங்கியப் பணத்தை கொடுத்துவிட வேண்டும் என்றேன். நான் செய்த உதவியை மறந்துவிட்டு பணம் தரவில்லை என புகார் கூறி வருகிறார். கலெக்டர்கிட்ட போனாலும் உனக்கு சேர வேண்டிய பணம் போக மீதி பணத்தை ரெட் கிராஸில் வரவு வைத்து விடுவேன் என சொன்னேன். அதை மிரட்டினேன் எனக் கூறி வருகிறார். மற்ற ஆறு டிரைவர்களுக்கும் பணம் கொடுத்து விட்டேன். சிலரின் தூண்டுதலின்பேரில் அந்தோணிராஜ் மட்டும் என் மீது புகார் கூறி வருகிறார்” என்றார்.