தமிழகம் கல்வியில் முதலிடம் வகிப்பதற்கு திராவிட மாடலே காரணம்: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதலிடம் வகிப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சிதான் என நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் நடந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் சமூக நலத்திட்டத்தின் கீழ் கூடன்குளத்தில் நடமாடும் மருத்துவம மையம் தொடக்க விழா, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுத் தொகை , அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.  

இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளி வரமுடியாத நிலை, கல்வி பயில முடியாத நிலை இருந்தது வந்தது. இதனை எதிர்த்து குரல் கொடுத்து சம உரிமை பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். இவரைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சமூக நீதியை கடைப்பிடித்து வருவதன் விளைவாக தமிழக கல்வித்துறையில் வெகுவாக முன்னேறியுள்ளது.

இந்திய அளவில் பட்ட படிப்பு கற்றவர்கள் எண்ணிக்கை சராசரி 34 சதவீதமாக உள்ளது. இதில் தமிழகத்தில் பட்டம் படித்தவர்கள் எண்ணிக்கை 51.6 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது. இதுதான் திராவிடமாடல் ஆட்சி. 

உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ்தான் என நிருபித்தவர் கல்டுவெல். அந்த தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இலங்கை , சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 9 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது’ என பெருமிதத்துடன் தெரிவித்தார் . 

மேலும் அவர் கூறுகையில், ‘கூடன்குளம் அணுமின் நிலையம் சார்பில் இந்த விழா நடக்கிறது. அவர்களுக்கு அன்புடன் ஒரு கோரிக்கை வைத்துக் கொள்கிறேன் அணுமின் நிலையம் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர்கள், மற்றும் உள்ளுர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார் 
 
இந்த நிகழ்ச்சியில் கூடன்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் , சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமதுசபீர் ஆலம், மாவட்ட ஊரக முகமை திட்ட அலுவலர் சுரேஷ், கூடன்குளம் பஞ்சாயத்து தலைவர் வின்சிமணியரசி,
திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜோசப் பெல்சி, பி.சி.ராஜன், பொதுக்குழு உறுப்பினர் சித்திக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பணகுடி பகுதியில் 21 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை சபாநாயகர் திறந்து வைத்தார் .

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.