சென்னை: “திமுகவைச் சார்ந்த ஊடகங்களின் எண்ணிக்கை இன்றைக்கு தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. காரணம், திமுக கட்சி ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பது: “தமிழகத்தின் கெட்ட காலம் என்னவென்றால், காசிருக்கக் கூடியவர்கள் குறிப்பாக அரசியலில் இருப்பவர்கள் ஒரு டிவி சேனல், தன்னால் முடிந்தவர்கள் ஒரு யூடியூப் சேனல் வைத்துக் கொள்கின்றனர். எல்லோருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு. கட்சிகளுக்கென்று சொந்தமாக ஒரு டிவி சேனல், ஒரு நியூஸ் பேப்பர் வைத்துள்ளனர்.
இதுபோன்றவர்கள் ஒரு கட்சியை, அதிலிருக்கக் கூடியவர்களை டார்கெட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குறிப்பாக திமுகவைச் சார்ந்த ஊடகங்களின் எண்ணிக்கை இன்றைக்கு தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக கட்சி ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ஆதாரங்களை வெளியிட @BJP4TamilNadu தயார்.
செய்தியாக வெளியிட @PTTVOnlineNews தயாரா? pic.twitter.com/KOvr2NaOsV
— K.Annamalai (@annamalai_k) January 4, 2023
அதனையும்தாண்டி DIPR என்ற அமைப்பு அவர்கள்தான் அரசின் விளம்பரத்துக்கு எவ்வளவு பட்ஜெட் என்பதை முடிவு செய்வார்கள். எந்த ஊடகங்கள் தங்களைச் சார்ந்து செய்திகளை வெளியிடுகிறது, எந்த ஊடகங்களை தங்களைச் சார்ந்து செய்திகளை வெளியிடவில்லை என்பதைப் பார்த்து, விளம்பரங்களுக்கான நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழகத்தில் 8 கோடி ரூபாய் வாங்கும் செய்தித்தாளும் உள்ளது. வெறும் 40 லட்சம் ரூபாய் வாங்குகிற செய்தித்தாளும் உள்ளது. 18 கோடி ரூபாய் வரை வாங்கிய டிவி சேனல், நியூஸ் பேப்பர் இருக்கிறது. எதற்காக கொடுக்கிறார்கள் என்பதற்கு சம்பந்தமே இருக்காது. செய்தி நிறுவனங்களுக்கான விளம்பர பட்ஜெட்டை திமுக ஒரு கருவியாக பயன்படுத்தி, ஜர்னலிஸத்தை கட்டுப்படுத்துகின்றனர்.
பிஜிஆர் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு திமுக அரசு எப்படி சலுகைகள் வழங்கியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன என்பதற்கான ஆதாரங்கள் தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக செய்தி வெளியிட ஒரு சேனல் தயார் என்றனர். ஒரு மணி இதுகுறித்து பேசுவதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ரெடியாக இருக்கிறார். நாளை 7 முதல் 8 மணி வரை இதுகுறித்த நேர்காணலுக்கு ஒத்துக்கொண்டனர்.
ஆனால், இன்று வந்த அந்த ஊடக நண்பர், நான்தான் வந்து பேச வேண்டும் என்றார். DIPR தங்களுக்கான பட்ஜெட்டை நிறுத்திவிடுவார்கள் என்பதற்காக ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி, நான் வந்தால்தான் ஆதாரங்களை வாங்குவோம், நான் வந்தால் தான் பேசுவோம் என்பதெல்லாம் அபத்தம். ஆதாரங்களை வெளியிட்டு நிகழ்ச்சியை ஒளிப்பரப்புவதாக சொன்னீர்கள், ஆதாரங்களும், கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர், மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் தயார். நீங்கள் தயாரா? என்பதுதான் என்னுடைய ஒரே கேள்வி” என்று அந்தக் காணொலியில் பேசியுள்ளார்.
முன்னதாக, சென்னையில் உள்ள தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜன.4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன். விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டுச் செல்ல வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. என் மீது அனைவரும் தான் விமர்சனம் வைக்கிறார்கள். அதற்கான பதில் என்னுடைய மவுனம் தான்.
திமுக அமைச்சர் தொடர்பான ஆடியோ ஒன்று வந்தது. நீங்கள் அதை 48 மணி நேரம் கூட வெளியிடவில்லை. அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாமா?. திமுகவிடம் கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் உள்ளதா? நான் அந்த ஆடியோவை அளிக்கிறேன். நீங்கள் வெளியிடுவீர்களா? அதைவிடுத்து என்னிடம் கதை சொல்லாதீர்கள்” என்று பேசினார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.