நீட் விலக்கு.. மாணவர்களிடம் மன்னிப்பு கேளுங்க..! – திமுகவுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

வழக்கை திறம்பட நடத்தாமல், வாய்தா கோரி வரும் திமுக, தங்களுடைய இயலாமையை ஒப்புக் கொண்டு தமிழக மாணவர்கள், பெற்றோர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு விளையாடி வரும் இந்த நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாளர்கள் இன்னும் எத்தனை காலம் தான் தமிழக மக்களை ஏமாற்றப் போகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம், அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என தற்போதைய முதல்வரும், அவரது மகன் உதயநிதியும் தேர்தலின் போது மேடைதோறும்

முழங்கினார்கள்.

கடந்த 20 மாத கால இந்த ஆட்சியில் நீட் தேர்வை ஒழிக்க எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்காமல், அரைத்த மாவையே சட்ட முன்வடிவு என்ற பெயரால் அரைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசால் தொடரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை தாமதப்படுத்தாமல் விரைந்து நடத்தி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியிருக்க முடியும்.

ஆனால் அந்த வழக்கானது தாமாகவே உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பட்டியலிடப்பட்டது. அப்போது வழக்கை நடத்தாமல் திமுக அரசு வாய்தா கோரியதால், உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதத்திற்கு பட்டியலிட உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று (ஜன.,3) நீட் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த கையாலாகாத திமுக அரசு சார்பில், நீட் வழக்கை ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்குமாறு வாய்தா கோரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் திமுக அரசின் கோரிக்கையை நிராகரித்து கடும் கண்டனம் தெரிவித்து தலையில் குட்டியுள்ளது.

நீட் வழக்கை ரத்து செய்யும் சூட்சுமம் தங்களுக்கு மட்டும் தான் தெரியும் என பொய்யுரைத்து, மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதிமுக அரசு தொடர்ந்த நீட் வழக்கை தக்க வழக்கறிஞர்களை நியமித்து திறம்பட நடத்தாமல் நாடகம் நடத்துவது கடும் கண்டனத்துக்குரியது.

தங்களுடைய இயலாமையை வெளிப்படையாக மக்கள் மத்தியில் ஒப்புக் கொண்டு தமிழக

மாணவச் செல்வங்களிடமும், பெற்றோர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று

முதல்வரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.