சென்னை அருகில் உள்ள போரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (22). இவர் கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று ஷோபனா தன் தம்பியை திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காகத் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். மதுரவாயல் சர்வீஸ் சாலையில் பயணம் செய்யும்போது, சாலையில் எதிரே வந்த வேன் ஷோபனாவின் இரு சக்கர வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி ஷோபனா பைக்குடன் சாலையில் விழுந்தார். அப்போது சாலையில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று ஷோபனாவின் தலையில் ஏறி இறங்கிச் சென்றது. இதில் ஷோபனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாகப் பின்னால் அமர்ந்திருந்த அவருடைய தம்பி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இருந்தபோதிலும், கண் முன்னே தன் அக்கா உயிரிழந்ததைக் கண்ட சிறுவன் கதறி அழத் தொடங்கினான்.
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஷோபனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்ததுதான் விபத்துக்குக் காரணம் என்று அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்த சாலையைச் சரிசெய்யப் பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு தரப்பில் சரிசெய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

விபத்து நடந்து ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது சாலையில் உள்ள பள்ளங்களைச் சரிசெய்யும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணியை முன்னரே செய்திருந்தால், அநியாயமாக ஒரு இளம்பெண்ணின் உயிர் பறிபோயிருக்காது என்று ஷோபனாவின் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த நிலையில், விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுநர் பார்த்திபன், லாரி ஓட்டுநர் மோகன் ஆகியோரை இன்று போலீஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.