மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்த தாய்… நேரில் சென்று நெகிழ வைத்த கோவை ஆட்சியர்!

கோவையில் கணவரை இழந்து மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்த பெண்ணுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை, மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் வீடு தேடிச் சென்று வழங்கினார்.
கோயமுத்தூர் செட்டிபாளையம், பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தனது மனவளர்ச்சி குறைபாடுடைய மாற்றுத்திறன் கொண்ட மகன் ராமசாமியுடன், ஷீலா (44) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கோபால் 13 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த ஷீலாவுக்கும், அவரது மாற்றுத்திறனாளி மகனுக்கும், மணியம்மாள் (63) என்ற மூதாட்டி, தன்னுடன் தன் வீட்டிலே தங்கவைத்து, 13 ஆண்டுகளாக உதவி புரிந்து வருகிறார்.
image
ஷீலாவுக்கு, மூதாட்டி உறவு முறை இல்லை என்றாலும்கூட மனிதநேயத்துடன் தன்னுடன் தங்கவைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். மாற்றுதிறன் கொண்ட சிறுவனை அருகில் இருந்து எப்போதும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை என்பதால் ஷீலாவினால் வேலைக்குக் கூட செல்ல முடியாத நிலை இருந்துவருகிறது. தமிழ்நாடு அரசின் மாற்றுதிறனாளி நல உதவி தொகையே பெரிய வாழ்வாதாரம். அது தவிர, ஷீலா மற்றும் அவரது மகனுக்கு உறுதுணையாக கோவையில் உள்ள ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலைக்கு ரூ.6500 ஊதியத்துடன் கடந்த அக்டோபர் மாதம் வரை மணியம்மாள் சென்று வந்துள்ளார்.
image
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக பணியை விட்டு விட்டு தற்போது 4 ஆடுகள் வாங்கி பராமரித்து வருகிறார். தனது காலத்துக்கு பின்னர், ஷீலாவும், அவரது மகனும் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிப்பார்கள் என்பதால் அவர்களை நேற்று (03.01.2023), அழைத்துக் கொண்டு வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ஆட்சி தலைவர் அவர்களிடம் மனு அளித்தார். அவர்களின் சூழ்நிலை அறிந்து, உடனடியாக அவர்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சித் தலைவர், அவர்கள் மனு அளித்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி திட்ட பகுதி குடியிருப்பில் உடனடியாக வீடு ஒன்றை ஒதுக்கி உத்தரவு வழங்கினார்.
image
அந்த உத்தரவை, மாவட்ட ஆட்சித் தலைவர், பயனாளி ஷீலா வசிக்கும் இடத்துக்கு நேரில் சென்று அவரே வழங்கினார். மனிதநேய அடிப்படையில் ஷீலா மற்றும் அவரது மகனுக்கு உதவி செய்து உறுதுணையாக இருந்த மணியம்மாளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் பாராட்டினார். ஆதரவின்றி ஒரு காலத்தில் வீடின்றி தவித்த போது மணியம்மாளுக்கு 1.5 சென்ட் இடத்துடன் கோவை செட்டிபாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களின் அரசு வீடு வழங்கி வாழ்வாதாரம் கொடுத்ததை மணியம்மாள் மீண்டும் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார்.

நேற்று(2.1.23) மாற்றுத்திறனாளி மகனுடன் வீடு கேட்டு மனு அளித்த சீலா என்பவருக்கு இன்று(3.1.23) நேரில் சென்று,மலுமிச்சம்பட்டி குடியிருப்பில் தரை தளத்தில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கிய நெகிழ்வான தருணம்.#Coimbatore pic.twitter.com/RvNMcKRKvZ
— District Collector, Coimbatore (@CollectorCbe) January 3, 2023

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.38 ஆயிரம் பணத்தை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து வழங்கினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.