தேராதூன்: உத்தராகண்ட்டின் ஹால்ட்வானி பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மவுன விரதம் இருந்தார்.
உத்தராகண்ட்டில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மூன்றாவது பெரிய மாநகரம் ஹால்ட்வானி. இங்கு ரயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்திருப்பதாக நீண்ட காலமாக நடைபெற்ற வழக்கில் கடந்த மாதம் 20-ம் தேதி உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமத்திருக்கும் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு அங்கு வசிக்கும் மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆக்கரிக்கப்பட்ட இடம் என கூறப்படும் பகுதியில் 4 ஆயிரம் வீடுகள், 4 அரசு பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், ஒரு வங்கி, 10 மசூதிகள், 4 கோயில்கள் உள்ளிட்டவை உள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, இம்மாதம் 9ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஊர்வலங்கள், பிரார்த்தனைகள் போன்றவற்றில் ஹால்ட்வானி பகுதி மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஹால்ட்வானி மக்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலையிட வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் ஒரு மணி நேரம் மவுன விரதம் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மக்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் பிரார்த்திக்கொண்டிருக்கிறோம். மக்களின் வீடுகளுக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை இருக்கிறது. முதல்வர்தான் ஒரு மாநிலத்தின் பாதுகாவலர். எனவே, இந்த விவகாரத்தில் அவர் தலையிட வேண்டும். எனது மவுன விரதத்தை நான் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.