ஈரோடு / சென்னை: பெரியாரின் கொள்ளுப்பேரனும், ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார்.
பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். இவரது மகன் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர், மத்திய இணை அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். இவரது மூத்த மகன் திருமகன் ஈவெரா(46).
2021 சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவை எதிர்த்து, அதிமுக கூட்டணி சார்பில் தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். இந்த தேர்தலில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திருமகன் ஈவெரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்த அவருக்கு நேற்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த திருமகன் ஈவெராவுக்கு மனைவி, மகள் உள்ளனர். இவரது சகோதரர் சஞ்சய், சென்னையில் வசிக்கிறார்.
பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர், தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டில், திருமகன் ஈவெரா உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சென்னையில் இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று மாலை ஈரோடு வந்தார்.
திருமகன் ஈவெரா உடலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, தமாகா இளைஞரணித் தலைவர்யுவராஜா, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஈரோடு காவிரிக் கரையில் உள்ள ஆத்மா மின் மயானத்தில் இன்று (ஜன. 5) மதியம் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
திருமகன் ஈவெரா மறைவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: திருமகன் ஈவெரா எம்எல்ஏ மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைதியோடும், பொறுப்புணர்வோடும், மூத்தவர்களிடம் மரியாதையோடும் நடந்து கொண்ட திருமகன் ஈவெரா அனைவரது அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்தார். அன்பு மகனை இழந்துள்ள அண்ணன் இளங்கோவனை எப்படித் தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன். திருமகனின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக, காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் திருமகன் ஈவெரா. 46 வயதே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்ட அனை வருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, திக தலைவர் கி.வீரமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், சு.திருநாவுக்கர சர் எம்.பி., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் இரங்கல் தெரி வித்துள்ளனர்.