ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை; முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி.!

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா – நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் தனது தாயார் ஹீராபென் மறைவு காரணமாக, அவரால் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும், தாயின் இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

முன்னதாக, வந்தே ரயில் சேவை துவக்க விழாவில், பாஜக தொண்டர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷம் எழுப்பினர். இதனால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில் ஏற மறுத்து விட்டார். ரயில் நிலையத்தின் நடைமேடையிலேயே நின்றார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஆகியோர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மேடையில் ஏறும்படி சமாதானப்படுத்தினர். ஆனால், முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில் ஏற மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ஹவுரா-நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது, பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு கடந்த செவ்வாய்கிழமை அன்று கற்கள் வீசப்பட்டன. இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, அண்டை மாநிலமான பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், அவரது மாநிலம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

“மூன்று நாட்களாக நிறைய டி.வி. சேனல்கள் வங்காளத்தை அவதூறாகப் பேசியதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். போலிச் செய்திகளைக் காட்டி, பொய்யான தகவலைப் பரப்பி வங்காளத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சட்டம் அதன் போக்கில் செல்லும்.

இது வங்காளத்தில் நடக்கவில்லை; இது பீகாரில் நடந்துள்ளது. பீகார் மக்களுக்கு புகார் இருக்கலாம். அவர்கள் புகார் அளித்து ஏதாவது செய்திருந்தால், பீகாரை அவமதிப்பது இன்னும் சட்டவிரோதமானது. இந்த சேவைகளை பெற அவர்களுக்கும் உரிமை உண்டு. ஏனெனில் அங்கு பாஜக ஆட்சியில் இல்லை. வந்தே பாரத் ரயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய இயந்திரத்துடன் புதுப்பிக்கப்பட்ட பழைய ரயில்’’ என்று மம்தா பானர்ஜி கூறினார்.

கல் எறி சம்பவம் குறித்து ரயில்வே நடத்திய விசாரணையில், பீகாரிலும் இதேபோன்ற சம்பவம் நடந்ததாக கிழக்கு ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் மீது கற்களை வீசியவர்களை அடையாளம் கண்டுவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

“ஹவுரா-புதிய ஜல்பைகுரி வந்தே பாரத் ரயிலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில், ரயில்வே ஏற்கனவே வீடியோவில் கல் எறிபவர்களை அடையாளம் கண்டுள்ளது.

என் அண்ணனை அம்பானி அதானியால் விலைக்கு வாங்க முடியாது- பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி!

மேலும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட மற்றும் தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளை கைது செய்யவும், சட்ட நடைமுறைகளை தொடங்கவும் மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது’’ என ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.