கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி, காப்பு காடுகளுக்கு அருகில் குவாரிகள் செயல்பட தடை இல்லை என்று அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம், மாவட்ட அளவில் கூட்டம் ஒன்று நடந்தது.

அந்தக் கூட்டத்தில் பலர், தடை சட்டத்தை நீக்க கோரிக்கை விடுத்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. 3.11.2021 அன்று தான் இச்சட்டம் செயல்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு, பூவுலகின் நண்பர்கள், பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 24 -ம் தேதி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
தொழிற்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “குவாரிகள், சுரங்க குத்தகைதாரர்களின் நலனை பாதுகாக்கவே, இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தேசிய பூங்காக்கள்-வனவிலங்கு சரணாலயங்களை சுற்றி உள்ள பகுதிகள் தொடர்பான மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல், இந்த அறிவிப்பிற்கு ஒத்துப்போகிறது” என்ற விளக்கத்தை கொடுத்தது.

டிசம்பர் 22 -ம் தேதி, காலநிலை மாற்றத் துறைக்கான அமைச்சர் மெய்யநாதன், காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்து, ‘பறவைகள் சரணாலயம், காப்புக் காடுகளுக்கு அருகில் குவாரிகள் அமைக்க கூடாது என்று சட்டம் உள்ளது. அதனை மீறி யாரேனும் குவாரிகள் அமைத்திரைந்தால், அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மூடுவோம்’ என்று மழுப்பலான பதிலை அளித்தார்.
இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் பேசினோம்.. அவர் பேசுகையில், “காப்புக் காடுகளுக்கு அருகில் குவாரிகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்ததை, முதலில் இருந்தே நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம். எங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாகவே தொழில்துறையின் சார்பில் விளக்க அறிக்கை அளிக்கப்பட்டது.

அதனை அடுத்து நேற்று (4/1/2023), தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் கையெழுத்து பெற்று, மனுவை முதல்வருக்கு அனுப்பி இருக்கிறோம். தொழிற்துறை சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தை நாங்கள் ஏற்கவில்லை. அடுத்த கட்டமாக, அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டங்கள் நடத்துவது பற்றி கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
தமிழக அரசு குவாரிகள் இயங்க அனுமதி அளித்ததனால், 500 குவாரிகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். இது காடுகளை அழிக்கும் செயல். ஒரு பக்கம் காடுகளின் பரப்பளவை 33% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு, மற்றொரு பக்கம் காடுகளை அழிக்கும் செயலில் ஈடுபடுவது முரணான ஒன்று. இந்த உத்தரவால் காடுகள், வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்படும். மனித விலங்கு மோதல்கள் அதிகரிக்கும். தமிழக அரசின் இந்த உத்தரவு மேலும் பசுமை பரப்பளவை குறைக்குமே தவிர, காடுகளின் பரப்பளவை உயர்த்த உதவாது” என்றார்.